search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 3,070 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 3,070 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

    கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
    கோவை:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில், விடுபட்ட வாக்காளர்கள் குறிப்பாக 18 முதல் 21 வயதுடைய வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மேலும், இந்த முகாமில், வாக்காளர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி திருத்தம் செய்ய படிவம் 8, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் கொடுத்தனர்.

    கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களும் பணியாற்றினார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை கண்காணிக்க 10 துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். முகாம்கள் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே போல கோவை சாய்பாபா காலனி ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை அம்மன்அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது பப்பாயா ராஜேஷ், பாலமுரளி, கமலகண்ணன், ஆர்.கே.ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இது குறித்து வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த முறை 2 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் தான் அமைக்கப்பட்டுருந்தன. தற்போது 178 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் ஆகியவற்றை வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம்-6 உடன் இணைத்து கொடுக்க வேண்டும்.

    இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை என்று கூறி பலர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 25 வயது வரை இருந்தால் அவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் மண்டல அலுவ லகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். நேற்று நடந்த முகாமில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மேலும் வருகிற 23-ந் தேதி, அடுத்த மாதம்(அக்டோபர்) 7 மற்றும் 14-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது பலரும் விண்ணப்பம் அளிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×