search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடி காணப்பட்ட வகுப்பறை
    X
    வெறிச்சோடி காணப்பட்ட வகுப்பறை

    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வெளியேற்றம்- பேராசிரியர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் மைதிலி, புனிதா பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் 5 பேர் குழு கடந்த மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை நடத்தியது.

    கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வீடியோக பதிவு செய்தனர்.

    பின்னர், விசாரணை அறிக்கையை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமியிடம் சமர்பித்தனர். முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தது.

    அப்போது, மாணவி நீதிமன்ற அனுமதிபெற்று விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்தார். இதனால், மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக மாணவிக்கு 31-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு சம்மன் அனுப்பியது.

    நீதிமன்ற அனுமதி பெற்று மாணவி நேற்று மதியம் 1 மணிக்கு வேளாண் கல்லூரி வளாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுவதும் ஒழுங்கு நடவடிக்கை குழு வீடியோவில் பதிவு செய்தது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி விரிவாக விளக்கமளித்தார். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை வேந்தரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகளை பேராசிரியைகள் ‘வாருங்கள் வெளியே போகலாம். அந்த மாணவி மட்டும் தனியாக இருக்கட்டும்’ என்று கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றனர்.

    இதேபோல் மற்ற வகுப்புகளில் இருந்த மாணவ, மாணவிகளையும் பேராசிரியைகள் வெளியே அழைத்து செல்வதாக கூறினர். மாணவி மட்டும் தனது வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தார். பாலியல் புகார் கூறிய மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கூறினர்.

    இதையடுத்து, மாணவி வலுகட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அவருடைய படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. மாணவி கூறியபோது, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையறிந்த வாழவச்சனூர் கிராமமக்கள் ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பு திரண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×