search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியரிடம் நூதன முறையில் நகை-பணம் பறிப்பு- வாலிபர் கைது
    X

    ஆசிரியரிடம் நூதன முறையில் நகை-பணம் பறிப்பு- வாலிபர் கைது

    பேஸ்புக்கில் பெண் போல் பேசி ஆசிரியரிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது26). இவர் பாளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமார் பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அவரது பேஸ்புக்கில் ஒரு பெண் போல் பேசி அறிமுக மாகியுள்ளார்.

    பின்னர் பிரேம்குமாரை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து பேஸ்புக் நண்பரை சந்திப்பதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு பைக்கில் வந்த ஒரு வாலிபர் பிரேம் குமாரை அழைத்து கொண்டு பாளை அருகே உள்ள கீழ நத்தம் காட்டு பகுதிக்கு சென்றார்.

    அங்கு ஏற்கனவே மறைந்திருந்த சிலர் பிரேம் குமாரை அடித்து உதைத்து தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறித்தனர். மேலும் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி அவரிடம் இருந்து மிரட்டி ரகசிய எண்ணை கேட்டுள்ளனர்.

    இதையடுத்து அந்த கும்பல் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.8 ஆயிரத்தை எடுத்துள்ளனர். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. தாக்குதலில் காயம் அடைந்த பிரேம்குமார் அங்கிருந்து சென்று பாளை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக இன்ஸ் பெக்டர் ராமையா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை பிடிப்பதற்காக சப்- இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் பிரேம்குமார் கூறிய அடையாளங்களை வைத்து மர்மக்கும்பலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று சந்தேகத்தின் பேரில் திம்ம ராஜபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரேம் குமாரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது இவரும், இவர்களது நண்பர்களான சூர்யா, ஸ்ரீராம் என்பவர்களும் என தெரியவந்தது.

    இதையடுத்து முத்துக்குட்டியை கைது செய்த போலீசார் சூர்யா, ஸ்ரீராமை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கும்பல் சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே ஊழியரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் வேறு எந்த வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×