search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் பலத்த மழை - வேகமாக நிரம்பும் அணைகள்
    X

    ஊட்டியில் பலத்த மழை - வேகமாக நிரம்பும் அணைகள்

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
    காந்தல்:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதி நீலகிரி மாவட்டத்தை ஒட்டி உள்ளது. அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, கூடலூர், குன்னூர் கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஊட்டியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை மின்சாரம் வந்தது. ஆனாலும் அடிக்கடி நிறுத்தப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மழை கோட்டு அணிந்தபடி சென்றனர். தொடர் மழை, குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    குன்னூர்- 2, ஜி. பஜார்- 45, கே. பிரிட்ஜ்-25, கேத்தி -5, கோத்தகிரி -5, நடுவட்டம் -62, ஊட்டி - 40.20, கல்லட்டி - 20, கிளர் மோர்கன் - 80, அப்பர் பவானி - 135, எமரால்டு - 57, அவிலாஞ்சி - 158, கெத்தை - 9, கின்னக்கொரை- 1, தேவலா- 68.

    நீலகிரி மாவட்டத்தில் அவிலாஞ்சியில் அதிகபட்சமாக 158 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×