search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் மழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    மீண்டும் மழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை கொட்டியதால் பவானிசாகர் அணை நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் வனப்பகுதி மலையடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மண்ணால் உருவாக்கப்பட்ட 2-வது பெரிய அணை ஆகும்.

    கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை கொட்டியதால் அணையின் நீர்மட்டம் கிடு...கிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தது. எனினும் சராசரியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6933 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 450 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

    இதேபோல் பொது மக்களின் குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக இருந்தது.
    Next Story
    ×