search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
    X

    தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

    பிரியாணி கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #MKStalin #Biriyani #DMK
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடையை அவருடைய தம்பி பிரகாஷ்(வயது 42) நிர்வகித்து வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்க ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகியான பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் புகுந்து பிரியாணி கேட்டனர். ஆனால் பிரியாணி தீர்ந்து விட்டதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பிரகாஷ் மற்றும் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கி விட்டு கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றனர்.

    இதில் பிரகாஷ் மற்றும் ஊழியர்களான கருணாநிதி(33), நாகராஜ்(55) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பிரியாணி கடை ஊழியர்களை தி.மு.க. நிர்வாகிகள் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பிரியாணி கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய யுவராஜ் மற்றும் திவாகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக நேற்று முன்தினம் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.

    இந்தநிலையில் தாக்குதல் நடந்த பிரியாணி கடைக்கு நேற்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, காயம் அடைந்த பிரகாஷ் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கே.என்.நேரு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பிரியாணி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக ருத்ரகுமார்(26), கார்த்திக்(23), கிஷோர்(19), சுரேஷ்(21), மற்றொரு கார்த்திக்(22), ராம் கிஷோர்(22), சதீஸ்குமார்(21) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



    இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் ஒரு சிலரின் இதுபோன்ற செயல்களால், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு வீணாவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் கட்சியில் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என கூறியுள்ளார்.

    பிரியாணி கடையில் தாக்குதல் நடத்தியவர்களை கட்சியில் இருந்து நீக்கிய மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா பாராட்டி உள்ளார். #MKStalin #Biriyani #DMK
    Next Story
    ×