search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் மது போதையில் ரவுடிகள் மோதல் - பொதுமக்கள் மீது தாக்குதல்
    X

    பெரம்பலூரில் மது போதையில் ரவுடிகள் மோதல் - பொதுமக்கள் மீது தாக்குதல்

    பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த சிலர் பாட்டில்கள், கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
    பெரம்பலூர்:

    சென்னை சூளைமேடு பகுதியில் பிரபல ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரவுடி பினு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகி தற்போது தலைமறைவாகி விட்டார்.

    அதேபோல் பெரம்பலூரில் பார்ட்டி கொண்டாடிய ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் லாட்ஜ் உள்ளது. இந்த ஓட்டலில் கே.கே. நகர் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் பார்ட்டி நடத்துவதற்கு நேற்று அறை எடுத்துள்ளனர். அங்கு பிரியாணி விருந்துடன் மது குடித்த அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதனால், ஓட்டல் மாடியில் கிடந்த பழைய பொருட்கள் மற்றும் கற்களை கொண்டு, சுற்றி இருந்த வீடுகளின் மீது சரமாரியாக வீசியுள்ளனர். தொடர்ந்து, உருட்டு கட்டை, கற்களை கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    நள்ளிரவு நேரத்தில் நடந்த சம்பவத்தால் பயந்து போன பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, அவர்களையும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

    இதில் லாட்ஜ் அருகேயுள்ள வீட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்த ரவுடிகள் போலீசார் வருவதற்குள் தப்பியோடிவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் முகாம் அலுவலகத்தை (வீடு) முற்றுகையிட்டு, அதே இடத்தில் திருச்சியில் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இரவோடு இரவாக கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் கே.கே.நகர், நியூகாலணி உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவு பதட்டமான சூழல் நிலவியது.
    Next Story
    ×