search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கேள்வி

    நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஐகோர்ட்டுக்கு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து பலர் சட்டவிரோதமாக கடை வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

    இதையடுத்து, ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் தேவநாதனை, நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதல் அமர்வு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    பதிவாளர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, அப்பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிதாக பதவி ஏற்ற அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.

    இந்தநிலையில், டிராபிக் ராமசாமி மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்.எஸ்.சி.போஸ் சாலை நெரிசலான பகுதி என்பதால் நடைபாதை கடை நடத்த ஏற்கெனவே ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.

    அவர்கள் மீது நான் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடையாள அட்டை வழங்கியுள்ளனர். எனவே அந்த அடையாள அட்டைகளை ரத்து செய்வதுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை மதியம் 1 மணிக்கு தள்ளிவைத்து, அப்போது மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜரானார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் நடைபாதை கடை அமைக்க வியாபாரிகளை எப்படி அதிகாரிகள் அனுமதித்தார்கள்? நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. நடைபாதை வியாபாரிகள் தொடர்பாக தினமும் ஏராளமான வழக்குகள் தாக்கலாகிறது. ஒவ்வொரு வழக்கிலும் அரசு தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டு வருகிறது. நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், 20 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்றுஇடம் வழங்குவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ’கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே பதிலைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக வருகிற 20-ந்தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கின் விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews
    Next Story
    ×