search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியது- காய்கறிகள் விலை உயரும் அபாயம்
    X

    தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியது- காய்கறிகள் விலை உயரும் அபாயம்

    டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #LorryStrike #DieselPriceHike
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    கடந்த மாதம் கச்சா எண்ணை விலை உயராவிட்டாலும் மற்ற காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்தன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86 வரை உயர்ந்தது. டீசல் விலையும் உச்சத்தை தொட்டது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சரக்கு லாரி உரிமையாளர்களுக்கு வருவாயில் கணிசமான தொகை இழப்பானது. இதனால் பெட்ரோல்-டீசல் விலைகளை கட்டுப்படுத்த அகில இந்திய லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலைகள் குறைந்தன. என்றாலும் அவை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

    இந்தியா முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. டீசல் விலை எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். லாரி உரிமையாளர்கள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

    டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும். சுங்க கட்டணம் மற்றும் மூன்றாம் நபர் விபத்து காப்பீட்டு கட்டணம் போன்றவற்றை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று (18-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று  முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.


    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாதவரத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிற்கின்றன. பல்வேறு இடங்களுக்கு செல்லக் கூடிய லாரிகள் சரக்குகளை ஏற்றாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

    லாரி டிரைவர்களும், கிளீனர்களும் லாரிகளில் அமர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்கள். லாரி ஸ்டிரைக் தொடங்கி இருப்பதால் காய்கறிகள், எண்ணை, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் இன்று குறைவாக வந்துள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படும். ஆனால் இன்று 250 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்ததாக கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    சென்னைக்கு இன்று காலை வந்த சுமார் 250 லாரிகள் வெளிமாநிலங்களுக்கு புறப்பட்டு செல்லாது. அவை கோயம்பேட்டிலேயே நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் முழுமையாக தடைப்பட்டு விடும்.

    லாரி ஸ்டிரைக் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் 2, 3 நாட்களுக்கு காய்கறிகள் வராது. எனவே காய்கறிகள் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.

    காய்கறிகள் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கும். நேற்றைய விலையை விட இன்று விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் லாரி வாடகை ரூ.8000 அதிகரித்து விட்டது. 20-ந்தேதி முதல் காய்கறிகள் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

    காய்கறிகளை போல மற்ற பொருட்களையும் வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாதவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளின் டிரைவர் ஒருவர் கூறுகையில், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதை மீறி சரக்குகளை ஏற்றிச் சென்றால் பிரச்சனை ஏற்படும் என பயந்து நிறுத்தி வைத்துள்ளேன் என்றார்.


    ஒரு சில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை மீறி லாரிகளை இயக்கினால் பாதிப்பு ஏற்பட்டு விடும் என பயந்து லாரியை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதற்கிடையில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் முக்கிய சங்கங்கள் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் மாநில சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறும்போது, “சுமார் 4½ லட்சம் உறுப்பினர்களை கொண்ட எங்கள் சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    ஜூலை மாதம் 20-ந்தேதி வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என்றார்.

    தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike #DieselPriceHike
    Next Story
    ×