search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊதியூர் அருகே காற்றாலையில் திடீர் தீ விபத்து
    X

    ஊதியூர் அருகே காற்றாலையில் திடீர் தீ விபத்து

    ஊதியூர் அருகே காற்றாலை ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடி மதிப்பிலான எந்திரம் எரிந்து சேதம் அடைந்தது.
    காங்கேயம்:

    காங்கேயத்தை அடுத்த ஊதியூர் பகுதியில் நொச்சிபாளையம், ராசிபாளையம், கண்ணான்கோவில், சிறுகிணறு, ஒரம்பபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊதியூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான காற்றாலையின் மேல் பகுதியில் உள்ள எந்திரத்தில் நேற்று திடீரென்று புகை வந்தது.

    சிறிது நேரத்தில் அந்த காற்றாலையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. 70 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்து எரிந்ததை பார்த்த அந்தபகுதியினர் உடனடியாக இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனால் காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்த பகுதி அதிக உயரத்தில் இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் காற்றாலையில் இருந்த எந்திரம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

    அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் காற்றாலை எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் குடியிருப்புகள் அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விபத்து நேர்ந்தால் எந்திரத்தில் இருந்து கொதிக்கும் ஆயில் சிதறி அந்த பகுதியில் உள்ள மக்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே காற்றாலை பாதுகாப்பு அம்சங்களை நன்கு உறுதி செய்த பின்னர் காற்றாலைகளை நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×