search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் வழக்கு- 23 போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன்
    X

    குட்கா ஊழல் வழக்கு- 23 போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன்

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக 23 போலீஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Gutkha #GutkhaScam #CBIinquiry
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து குட்கா விற்பனையை தடுக்க ஆரம்பத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் இந்த நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட்டன.

    இதன் காரணமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி அமோகமாக விற்பனையானது. சென்னையிலும் கடைகளில் குட்கா விற்பனை வெளிப்படையாக நடைபெற்றது.

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் செங்குன்றம் அருகே உள்ள எம்.டி.எம். என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நிறுவனம் ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சோதனையின் போது டைரி ஒன்றும் சிக்கியது. அதில் போதை பொருட்களை விற்பனை செய்ய யார்-யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினால் குட்கா ஊழலில் உண்மைகள் வெளிவராது என்று குற்றம் சுமத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.


    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தது என்ன? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை விவரங்கள் மற்றும் கைப்பற்றிய ஆவணங்களை அவர்களிடமிருந்து கேட்டுப்பெறும் அதிகாரிகள் அதன் பின்னர் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

    லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சி.பி.ஐ. தரப்பிலும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். ஜார்ஜ் ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

    வடசென்னை பகுதியில் பணியாற்றிய இணை, துணை கமி‌ஷனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உதவி கமி‌ஷனர் ஒருவர் பெயர் வெளிப்படையாகவே பேசப்பட்டது. இப்படி 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர் குட்கா விவகாரத்தில் அடிபட்டது. இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    குட்கா விவகாரத்தை பொறுத்த வரையில் வருமான வரி துறையினர் கைப்பற்றிய டைரியும், போயஸ் கார்டனில் சசிகலா அறையில் சோதனை போட்ட போது சிக்கிய கடிதமுமே முக்கியமான 2 ஆதாரங்களாக உள்ளன.

    சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஜெயலலிதாவுக்கு அப்போதைய டி.ஜி.பி. எழுதிய கடிதமாகும். அதில் குட்கா ஊழலில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்கிற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அதே போல குடோன் அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரனையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

    இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை நடத்த உள்ளனர். எனவே குட்கா விவகாரத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #CBIinquiry
    Next Story
    ×