search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி
    X

    புத்தாக்க பயிற்சியில் இருந்து நிர்மலாதேவியை அனுப்ப மறுத்த அதிகாரி

    கல்லூரி திரும்ப அழைத்த பிறகும் பேராசிரியை நிர்மலாதேவியை புத்தாக்க பயிற்சியில் இருந்து விடுவிக்க பல்கலைக்கழக அதிகாரி மறுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாள் காவல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை நிர்மலாதேவி உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தக் கட்டமாக விசாரணையை எப்படி நடத்துவது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என கூறிய நிர்மலா தேவி, அவர்கள் யார்? என்பதை தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

    எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கி உள்ளனர். நிர்மலாதேவி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதில் முக்கியமானவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி மைய பொறுப்பாளர் கலைச்செல்வன். பேராசிரியை நிர்மலாதேவி தேவாங்கர் கல்லூரியில் இருந்து அடிக்கடி புத்தாக்க பயிற்சிக்காக பல்கலைக்கழகம் சென்று வந்துள்ளார்.

    கடந்த மாதம் 9-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில் நிர்மலாதேவி பங்கேற்றுள்ளார். அந்த சமயத்தில்தான் அவர் மீது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகார் எழுந்தது.

    இதனால் தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் நிர்மலாதேவிக்கான புத்தாக்க பயிற்சி அனுமதியை ரத்து செய்து கல்லூரி பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. ஆனால் புத்தாக்க பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வன் இதனை ஏற்காமல் நிர்மலாதேவியை அனுப்பவில்லை.

    மேலும் எதற்காக அனுமதி ரத்து என காரணம் கேட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள உத்தரவை கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்த பின்னரே புத்தாக்க பயிற்சியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தகவல் விசாரணையில் தெரியவந்ததும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று புத்தாக்க பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வனை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் புத்தாக்க பயிற்சியின்போது பேராசிரியை நிர்மலாதேவி தங்கி இருந்த விடுதிக்கு சென்று கலைச்செல்வன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு நீண்டநேரம் நீடித்தது.

    விசாரணைக்குப் பின்னரும் கலைச்செல்வனை போலீசார் விடுவிக்கவில்லை. அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திலேயே தங்க வைத்தனர். இன்று 2-வது நாளாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கைது செய்யப்படக்கூடும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிகிறது.

    இதேபோல் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற தஞ்சாவூர் பேராசிரியர் ஒருவருக்கும் நிர்மலா தேவியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் நிர்மலா தேவியை தூண்டியதாக போலீசார் தேடிவரும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கருப்பசாமி தலைமறைவாக உள்ளார். அவரை தேடி போலீசார் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    கருப்பசாமியின் சொந்த ஊர் திருச்சுழி அருகே உள்ள நாடாகுளம் கிராமம் என தெரியவந்ததும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சென்றனர். அங்கிருந்த கருப்பசாமி மனைவி கனகமணியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் இதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 4-வது நாளாக நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மருத்துவ பரிசோதனை நடத்தினர். போலீஸ் காவலில் நிர்மலாதேவியை எடுத்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3-ம் நாளான நேற்றுதான் அவரை வெளியில் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    Next Story
    ×