search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

    பூண்டி ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் ஏரிக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஜனவரி 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் மார்ச் 26-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை பூண்டி ஏரிக்கு 2280 மில்லியன் கனஅடி (2.280 டி.எம்.சி.) தண்ணீர் கிடைத்தது.

    கிருஷ்ணா தண்ணீர் வரத்து முழுவதுமாக நின்று விட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மார்ச் 26-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 30.85 அடியாக (1794 மில்லியன் கனஅடி தண்ணீர்) இருப்பு இருந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 25.75 அடியாக குறைந்தது. 948 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் இத்தனை நாட்களாக 460 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஏரியில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. வினாடிக்கு 400 கனஅடி வீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் 19 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர் மட்டம் 17 அடியாக குறைந்தால் புழல் ஏரி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு சாத்தியமாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×