search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா
    X

    ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா

    2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் என விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இதில் உள்ள உண்மைகளை கண்டறிவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கமி‌ஷன் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்த நபர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்த கமி‌ஷன் முடிவு செய்தது.

    ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்று பெங்களூரு ஜெயிலில் இருப்பதால் நேரடியாக ஆஜராக முடியவில்லை. எனவே சசிகலா இதுதொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை விசாரணை கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் இடம்பெற்றுள்ள பல தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தன. இப்போது மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில், 2011-ம் ஆண்டு தன்னை ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றியது ஏன் என்பது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    இதுசம்பந்தமாக பிரமாண பத்திரத்தில் சசிகலா கூறியிருப்பதாவது:-

    2011-ம் ஆண்டு மத்தியில் கட்சியில் சில சீரமைப்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டார். அந்த நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர்.


    இந்த நேரத்தில் ஜெயலலிதா இதுசம்பந்தமாக பத்திரிகையாளர் சோவிடம் பேசினார். அதன்பிறகு நான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது ஜெயலலிதா என்னிடம் கூறும்போது, சோ என்னிடம் சில தகவல்களை கூறியிருக்கிறார். அது என்ன என்பது பற்றி பின்னர் உனக்கு சொல்கிறேன். அதுவரை நீ தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிரு என்று கூறினார்.

    அதன்படி நான் தி.நகரில் உள்ள வீட்டில் போய் தங்கினேன். பின்னர் குறுகிய காலத்தில் மீண்டும் என்னிடத்தில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா உன்னைப் பற்றி எனக்கு வந்த தகவல் அனைத்துமே தவறானது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துவிடு என்று கூறினார்.

    அதன்படி 2012 மார்ச் மாதம் நான் போயஸ்கார்டன் திரும்பினேன். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த உறவினர்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடிதம் எழுதி கொடுத்தேன். சோ, ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த கடிதம் எழுதப்பட்டது.

    நான் ஒருபோதும் அரசியல் மற்றும் நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டதில்லை. ஜெயலலிதாவே அனைத்து தரப்பினரையும் அழைத்து நேரடியாக ஆலோசனை நடத்துவார். ஜெயலலிதா தெரிவிக்க சொல்லும் தகவல்களை மட்டும் 2-ம் நிலை தலைவர்களுக்கு நான் தெரிவிப்பேன்.

    2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. நான் எனது உறவினரான டாக்டர் கே. சிவக்குமாரை அழைத்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு ஜெயலலிதாவின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரி மூலம் ஏற்பாடு செய்தார். செப்டம்பர் 22-ந்தேதி அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் டாக்டர்கள் கூறினார்கள்.

    நான் இதுபற்றி ஜெயலலிதாவிடம் சொன்ன போது, நான் சற்று தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகி விடும். இப்போது ஆஸ்பத்திரிக்கு செல்வது தேவையற்றது என்று கூறினார்.

    இரவு 9 மணி அளவில் டாக்டர் சிவக்குமார் 3-வது தடவையாக வீட்டிற்கு வந்தார். இரவு 9.30 மணி அளவில் ஜெயலலிதா சாப்பிட்டு விட்டு பல் துலக்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென என்னை அழைத்தார்.

    ‘சசி எனக்கு மயக்கம் வருகிறது. உடனே ஓடி வா’ என்று கூறினார். நான் ஓடிச்சென்று அவரை படுக்கையில் படுக்க வைத்தேன். உடனேயே அவர் மயங்கி விழுந்து விட்டார்.

    டாக்டர் சிவக்குமார் உடனே அறைக்கு வந்து அவரது காலையும், கையையும் தேய்த்துவிட்டு உஷ்ணம் ஏற்படுத்த முயன்றார். மேலும் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர பிரிவுக்கு தகவல் அனுப்பினார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எழுந்து நடந்தார். டிசம்பர் மாதம் 29-ந்தேதி அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் 4-ந்தேதி அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் அவர் இறந்ததாக ஆஸ்பத்திரியில் அறிவித்தனர்.

    இவ்வாறு சசிகலா பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×