search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
    X

    குமரியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
    நாகர்கோவில்:

    இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து முறையான கல்வி வழங்க வேண்டும். இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கல்வி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இம்மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் சுமார் 422 பேர் பள்ளி செல்லாமல் இருக்கலாம் என்று தெரியவந்தது.

    குமரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் ஆகிய இரு திட்டங்களின் அதிகாரிகளும் இணைந்து குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கி உள்ளனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் ஆய்வு தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். செங்கல்சூளை, உப்பளம், கட்டிட வேலை போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இதுபோல நரிகுறவர்களும் பல இடங்களில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்களின் பெரும்பாலான குழந்தைகள் அடிப்படை கல்வியை கற்பதில்லை.

    மேலும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல் இடைநிற்றலில் ஈடுபடுவார்கள். இன்றைய ஆய்வில் பள்ளிக்கு செல்லாதவர்கள் மற்றும் இடைநின்றவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் இத்தகைய மாணவர்கள் 422 பேரை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவர்களை கண்டறியும் வரை ஆய்வுப்பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் இடை நிலை கல்வியை அளிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்கள். இந்த பணியில் அதிகாரிகளுக்கு துணையாக ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சமூகநலத்துறை அதிகாரிகளும் துணைபுரிவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×