search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகையில் எப்போதாவது நேர்காணல் நடந்தது உண்டா?- அமைச்சர்களுக்கு கி.வீரமணி கேள்வி
    X

    கவர்னர் மாளிகையில் எப்போதாவது நேர்காணல் நடந்தது உண்டா?- அமைச்சர்களுக்கு கி.வீரமணி கேள்வி

    துணை வேந்தர்களை தேர்வு செய்ய கவர்னர் மாளிகையில் எப்போதாவது நேர்காணல் நடந்தது உண்டா? என்று அமைச்சர்களுக்கு கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்வித்துறையைக் காவிமயமாக்கும் தீவிரப் பணியை மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மேற்கொண்டு வருகிறது. முன்பு பல பதவிகள், பொறுப்புகள் வகித்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்களைக் கொண்டு முக்கிய பதவிகளை வெகுவேகமாக நிரப்பிக் கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள டில்லியின் ஒரு பொம்மலாட்ட அரசு, தலையாட்டித் தம்பிரான்கள் மாநில உரிமைகள் பறிப்புக்குத் துணை போகும் அவலம் தொடர்கிறது.

    நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்குக் கோரி இரண்டு மசோதாக்கள் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்போடு ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி, ஏறத்தாழ 16 மாதங்கள் ஆகியும், இன்னமும் அதற்குரிய ஒப்புதலோ அல்லது நிராகரிப்போ இன்றி வெகு அலட்சியத்தோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய டி.கே.ரெங்கராஜன் கேள்விக்கு, உள்துறை அமைச்சகத்திற்கே கூட அனுப்பி வைக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரால் பதில் சொல்லப்படுகிறது.

    அதுபற்றி தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இன்றுவரை எந்த முயற்சியை எடுத்தது? கேள்வியை எழுப்பியது? வலியுறுத்தக்கூட இல்லையே! இத்தனைக்கும் 50 எம்.பி.,க்களைக் கொண்ட கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும்கூட! அறுக்க மாட்டாதவர் இடுப்பில் 1008 அரிவாள்கள் இருந்து என்ன பயன்?.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டிய தேவை - நியாயங்களை எடுத்துச் சொல்ல ஒரு பேட்டிகாண, கடிதம் எழுதினார் முதல்- அமைச்சர். தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமரிடம் மேடையிலேயும் சொன்னார், எந்தப் பதிலும் சொல்லாமல், அலட்சியப் புன்னகையுடன் பிரதமர் திரும்பினார்! இதை விட தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு வேறு உண்டா?

    இதற்கு ஏதாவது சிறு மறுப்பு அழுத்தம் தரும் வகையில் பதவி ராஜினாமா போன்ற நடவடிக்கைகள் ஏன் இல்லை?.

    மார்ச் -3-ந்தேதி தனியே பட்டினிப் போராட்டத்தை அறிவித்து அனைத்துக் கட்சிகள் விவசாய அமைப்புகளை அரவணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடே ஒன்றுபட்டுள்ளது என்று காட்டவேண்டிய ஒரு பொதுப் பிரச்சனையை, வெறும் கட்சிப் பிரச்சனைபோல அ.தி.மு.க. அரசு கையாண்டது நியாயம்தானா?

    அதில் நிறைவேற்றிய தீர்மானம் ஒப்புக்குச் சப்பாணி யாக மத்திய அரசின் அலட் சியப் போக்கைக் கண்டிக்கும் ஒரு சிறு வாசகம்கூட இடம்பெறாதது ஏன்?

    தமிழக முக்கிய அமைச்சர்கள் ஆளுநரைப் பார்த்து விளக்கம் கூறி வருவது அதை விட அவமானம் அல்லவா? குதிரை கீழே தள்ளியதோடு அது குழியும் பறித்த கதை அல்லவா இது?

    தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலைப் பல்கலைக் கழகத்துக்கும் ஒரு கேரளத்த வரை தகுதியுள்ள, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரைப் புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட ஒருவரை ஆளுநர் நியமித்தது எந்த வகையில் நியாயம்?

    அதேபோல், சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு ஆந்திர ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமனம். இப்போது பிரபல அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஒரு வெளிமாநிலத்தவரை- கருநாடகத்தவரை துணை வேந்தராக நியமித்துவிட்டு, மலைபோல் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், ஆளுநர் மாளிகை எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றுள்ளது என்று ஒரு டெக்னிக்கலான விளக்கம் தருவதை அரசியல் சட்ட ரீதியாகவோ, முந்தைய நடைமுறை மரபுப்படியோ நியாயப்பபடுத்த முடியுமா? விளக்கம் அளிப்போருக்கும், தலையாட்டும் சில அமைச்சர்களுக்கும் சேர்த்து சில கேள்விகளை முன் வைக்கிறோம். பதில் கூறுவார்களா?

    ஆளுநர் துணைவேந்தர்களை நேரிடையாக நேர்காணல் நடத்தி, நியமன ஆணை வழங்கும் அரசியல் கூத்து, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியவர்கள் முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் எங்காவது ஒருமுறையாவது நடந்ததாகக் காட்ட முடியுமா?

    மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா ஆட்சி என்று கூறுகின்றனரே, அந்த அம்மா உயிருடன் இருந்து ஆட்சி செய்தபோது, ஆளுநர்கள் இப்படி நடந்துகொண்டதாகக் காட்ட முடியுமா? ஆளுநர் நியமனம் செய்து அதற்கு விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டதுண்டா?

    இந்த நேர்காணல் என்ற கோணல், நியமனம் எல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின்பு தானே நடக்கிறது மறுக்க முடியுமா?

    அதுபோன்றதுதான் துணைவேந்தர்கள் நியமனமும்! இதை அறியாத அறிதொறும் அறியாமையுடன் அமைச்சர்கள் பதில் சொல்லி வருவது, வளைந்து கீழே குனிந்து நடப்பது மாநில உரிமையை அடகு வைத்த மகத்தான செயல் அல்லவா?

    எல்லாம் சரியான நடைமுறைப்படிதான் என்றால், தேடல் குழுவில் கூட இப்படி வெளிமாநிலத்தவர் முன்பு இடம்பெற்றது உண்டா?

    இதில் விளக்கம் கூறி, வெட்கப்படாதீர்கள்! அம்மா இருந்திருந்தால் இப்படியா நடந்திருப்பார்? என்ற கேள் விக்குப்பதில் உண்டா?

    இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். #Tamilnews
    Next Story
    ×