search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து நடந்த பட்டாசு குடோன்
    X
    விபத்து நடந்த பட்டாசு குடோன்

    வேலூரில் பட்டாசு குடோன் வெடித்து இளம்பெண் பலி

    வேலூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இளம்பெண் உடல் கருகி பலியானார். 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர், சேண்பாக்கம் ராகவேந்திரா தியேட்டர் முன்பு பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் ஆட்கள் மூலம் பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இன்று காலை 2 பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிளவில் ஒருவர் வந்து பட்டாசு வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதன்பிறகு, திடீரென குடோனில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் ஏற்பட்ட தீ ஜூவாலையும், சத்தமும் விண்ணை பிளக்கும் அளவு இருந்தது. குடோனில் இருந்த கன்சால்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த தீபா (வயது 25) என்ற இளம்பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கன்சால்பேட்டையை சேர்ந்த ஷீலா (30), கவியரசன் (30) மற்றும் சிவா (35) ஆகிய 3 பேரும் 90 சதவீதம் பலத்த தீக்காயமடைந்து, உயிருக்கு போராடினர்.

    வெடிசத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் குடோன் பகுதிக்கு திரண்டு ஓடி வந்தனர். தகவலறிந்த வேலூர் தீயணைப்புத்துறை அலுவலர்களும், 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    எஸ்.பி. பகலவன் மற்றும் உதவி கலெக்டர் செல்வராஜி, தாசில்தார் பாலாஜி, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய பெண் உள்பட 3 பேரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும், 3 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

    பலியான பெண்ணின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    Next Story
    ×