search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை- நீலகிரியில் ஆலங்கட்டி மழை- 2 ஆயிரம் வாழைகள் சேதம்
    X

    கோவை- நீலகிரியில் ஆலங்கட்டி மழை- 2 ஆயிரம் வாழைகள் சேதம்

    கோவை மற்றும் நீலகிரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அன்னூரில் பெய்த மழையில் 2 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் நிலவியது. கடந்த வாரம் ஒரு சில நாட்கள் மழை பெய்தது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டியில் சீசனை வரவேற்கும் விதமாக அடர்த்தியான மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சீதோஷ்ண நிலையில் குளிந்த காற்று வீசியது.

    குன்னூர் பகுதியில் மாலையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

    அதை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. கொலக்கம்பை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. கன்னேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.


    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் இடி -மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் ஆலங்கட்டி மழை பெய்ததால் சாலைகளில் ஐஸ் கட்டிகள் பரவி கிடந்தன. சாலை முழுவதும் வெண்மை நிறமாக காட்சியளித்தது.

    கோத்தகிரி நேரு பூங்கா புல்தரை, சாலை ஓரங்களில் ஐஸ் கட்டி கொட்டி கிடந்தது பார்க்க ரம்யமாக காட்சி அளித்தது. கோத்தகிரி அருகே உள்ள பெத்தட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.சீசனையொட்டி இன்று முதல் தங்கும் விடுதி மற்றும் லாட்ஜூகளில் இருமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். சீசனையொட்டி இன்று முதல் ஜூன் 15-ந்தேதி சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதேபோன்று கோவை மாவட்டம் பெரியநாயக் கன்பாளையம், கூடலூர் கவுண்டம் பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், இடிகரை, அன்னூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கையில் எடுத்து மகிழ்ந்தனர்.

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த 2 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று 7.30 மணிக்கு தொடங்கிய கோடை மழை 8.30 மணிவரை வெளுத்து வாங்கியது. கோடை வெயில் வாட்டிய நிலையில் இந்த மழை அந்த பகுதியில் இதமான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் அறுவடை முடிந்து விட்டது. அறுவடை முடிந்த வயலில் கால்நடைகளுக்கு பசும்புற்கள் முளைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×