search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைகள் சேதம்"

    • அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
    • பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் குருவ ரெட்டியூர், கரடிப்பட்டியூர், தண்ணீர்பந்தல் பாளையம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

    நாங்கள் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை முதலீடு செய்து கதலி ரக வாழையை பயிரிட்டோம். அடுத்த மாதம் அறுவடைக்கு தயா ராக உள்ள நிலையில் திடீரென மழை பெய்து எங்கள் வேளாண்மையை சேதப்படுத்தி விட்டது.

    இதனால் ஒரு வருட பயிரான வாழையை பாதுகாத்து வந்த நிலையில் திடீரென மழைக்கு சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை வரும் வருமானம் பறிபோனது.

    எனவே அரசு நிர்வாகம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட எங்கள் விவசாயத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
    • பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.

    அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது.
    • வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி

    கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் நேற்று திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் செருமுள்ளி, கீச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இந்த நிலையில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் பரவலாக வெயில் காணப்பட்டது. தொடர்ந்து லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது. மாலை முதுமலை ஊராட்சி பகுதியில் திடீரென கனமழை பெய்தது. தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் மூழ்கியது. இதனிடையே விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பயிர்களுக்கு அளித்த உரமும் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை ஊராட்சியில் பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் நீரில் மூழ்கியது. இதனால் வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலத்தில் போட்டிருந்த உரமும் அடித்து செல்லப்பட்டது. ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×