search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே நர்சுக்கு கொலை மிரட்டல்- கூலித்தொழிலாளி கைது
    X

    சிங்காரப்பேட்டை அருகே நர்சுக்கு கொலை மிரட்டல்- கூலித்தொழிலாளி கைது

    பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததால் நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர்பூங்குனை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் திவ்யா (வயது 21). இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரியைச் சேர்ந்த ராமன் மகன் ஜெயச்சந்திரன் (28). கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரெயிலில் சேலத்திற்கு சென்றார். அப்போது அவர் அருகே திவ்யா அமர்ந்து சேலத்திற்கு சென்றுள்ளார். இருவரும் சேலம் செல்லும் வரை பேசிக்கொண்டே சென்றதில் திவ்யாவின் செல்போன் எண்ணை ஜெயசந்திரன் வாங்கினார்.

    இதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டதால் நட்பாக பழகினர். பின்னர் இந்த நட்பு அவர்களுக்கிடையே காதலாக மாறியது.

    இருவரும் தங்களது காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அவர்களிடம் தங்களது காதலை இருவரும் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏலகிரியில் உள்ள ஜெயசந்திரன் வீட்டிற்கு சென்று அவருக்கும் திவ்யாவுக்கும் திருமணம் பேச சென்றனர். அங்கு ஜெயசந்திரனின் வீட்டில் வசதிகள் ஏதும் இல்லாததால் திவ்யாவின் பெற்றோர்கள் எதுவும் பேசாமல் திரும்பி சென்று விட்டனர்.

    நேற்று ஜெயசந்திரன் மற்றும் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பெண் கேட்டு புதூர் பூங்குனையில் உள்ள திவ்யா வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது ராமன், எந்த வசதியும் இல்லாத உங்கள் மகனுக்கு எனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கறாராக கூறி விட்டார். இதனால் இருதரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயசந்திரன், திவ்யாவை பார்த்து நீ என்னை திருமணம் செய்து கொள்ள வில்லை என்றால், உன்னையும் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனை கேட்ட திவ்யாவின் உறவினர்கள் ஜெயசந்திரனை தாக்க முயன்றனர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    தனது மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து திவ்யாவின் தாய் சாந்தி கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெயசந்திரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெயசந்திரனை ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஊத்தங்கரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×