search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த உண்ணாவிரத போராட்டம்
    X

    ஓசூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த உண்ணாவிரத போராட்டம்

    ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், கே.கே.136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. தொரப்பள்ளி அக்ரஹாரம் மற்றும் பேரண்டபள்ளி ஆகிய 2 ஊராட்சிகளுக்குட்பட்ட இந்த கூட்டுறவு சங்கத்தில் 1800 உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தொரப்பள்ளி அக்ரஹாரம் கூட்டுறவு சங்கத்திற்கு போட்டியிட, தி,மு.க., காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்தோரும், கட்சி சாராதவர்களும் என மொத்தம் 50 பேர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால், வேட்பு மனுவை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை, அதிகாரிகள் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, பிறகு வழங்குவதாக கூறினர்.

    ஆனால் அன்று மாலையில் பூட்டப்பட்ட அலுவலகம், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்த வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தொரப்பள்ளி கூட்டுறவு சங்கத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். மேலும், ஆளுங்கட்சியை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    பின்னர், தி.மு.க. விவசாய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க கிளை தலைவர் ஆஞ்சப்பா மற்றும் திம்மப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    தேர்தலில் போட்டியிட 50 பேர் மனு செய்துள்ளோம். இன்று இறுதிபட்டியல் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காலை முதலே அலுவலகம் முன்பு காத்திருக்கிறோம். ஆனால், செவ்வாய்கிழமை அலுவலகத்தை பூட்டி சென்ற அதிகாரிகள் இன்று வரை இந்த பக்கமே வரவில்லை. அலுவலகமும் திறக்கப்படவில்லை. அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தேர்தல் குறித்த எந்த விவரமும், பட்டியல் போன்றவற்றை ஒட்டவும் இல்லை. இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். தேர்தல் முறையாக நடக்காவிடில், ஒட்டு மொத்த ஊராட்சி மக்களும் தேர்தலை புறக்கணிப்போம், மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரவும், தீக்குளிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த போராட்டத்தில், மேலவை பிரதிநிதி சந்திரப்பா, பெருமாள் கவுண்டர், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் மஞ்சுநாத், தே.மு.தி.க. ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், மற்றும் திம்மப்பா, வெங்கடபதி, நாராயணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×