search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித உரிமை ஆணைத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த போக்குவரத்து போலீசாரை படத்தில் காணலாம்.
    X
    மனித உரிமை ஆணைத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த போக்குவரத்து போலீசாரை படத்தில் காணலாம்.

    இன்ஸ்பெக்டர் உதைத்ததில் உஷா பலி: திருச்சி போலீசாரிடம் மனித உரிமை ஆணையத்தினர் விசாரணை

    திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதைத்ததில் பலியான உஷா வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையத்தினர் இன்று விசாரணை நடத்தினர்.
    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி உஷாவுடன் கடந்த 7-ந்தேதி திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவை நிறுத்திய போது அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார்.

    இதில் ராஜாவும், உஷாவும் தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய மறியல் போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அரசு சொத்தை சேதப்படுத்தியதாக 23 பேர் கைதும் செய்யப்பட்டனர். அதேபோல் இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனு திருச்சி கோர்ட்டில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது காவலும் வருகிற 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உஷா பலியான வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையத்தினர் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர். திருச்சி சுற்றுலா மாளிகையில் மாநில மனித உரிமை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண பிரபு முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. முதல் கட்டமாக போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


    இதில் உஷா பலியான வழக்கு குறித்து விசாரணை நடத்தும் டி.எஸ்.பி. புகழேந்தி மற்றும் பெல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சீராளன், சம்பவம் நடந்த போது பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோனா, சுரேஷ், சாந்தகுமார், மாடசாமி மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பார்த்திபன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் மனித உரிமை ஆணையக் குழுவினர் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் சில கேள்விகளுக்கு போலீசார் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காமராஜிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. உஷாவின் குடும்பத்தினர் மற்றும் சம்பவம் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் மனித உரிமை மீறப்பட்டிருப்பது தெரியவந்தால் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews

    Next Story
    ×