search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாள்தோறும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு - புதுவை அரசு நிர்வாகத்தில் கவர்னர் கிரண்பேடி அதிரடி
    X

    நாள்தோறும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு - புதுவை அரசு நிர்வாகத்தில் கவர்னர் கிரண்பேடி அதிரடி

    புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் அரசு அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து ஆலோசன நடத்தி வருவது மாநில ஆட்சியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள் முதல் அரசு நிர்வாகத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படும்போது கவர்னர் அரசின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநரான தனக்கே முழு அதிகாரம் உள்ளது என கவர்னர் கிரண்பேடி கூறிவந்தார். இதனால் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் போக்கு நிலவியது. இதனால் அரசு அதிகாரிகளிடையிலும் பிளவு ஏற்பட்டது. முன்பிருந்த தலைமை செயலாளர் மனோஜ்பரிதா அமைச்சரவை பக்கம் இருந்தார். இதனால் ஒரு சார்பு அதிகாரிகள் கவர்னரிடமும், மற்றொரு சார்பு அதிகாரிகள் அமைச்சரவையிலும் செயல்பட்டனர்.

    இதனால் அரசு நிர்வாகத்தில் தேக்கம் ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். கவர்னரை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் பல போராட்டங்களையும் நடத்தினர். முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் தனது அதிகார எல்லையை மீறி செயல்படுவதாக மத்திய அரசிடம் புகாரும் செய்தார். இதனால் கவர்னர், அமைச்சரவை இடையிலான மோதல் நாளுக்குநாள் விரிசலடைந்து வந்தது.

    இத்தகைய சூழலில் தீபாவளிக்கு அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் 2 கிலோ சர்க்கரை வழங்க கவர்னர் அனுமதி தரவில்லை. இதனால் சர்க்கரை வழங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொங்கல் பொருட்கள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினர்.

    இதன்பின்பு இலவச பொங்கல் பொருட்கள் வழங்க அனுமதி கிடைத்தது. அதோடு சிகப்பு ரே‌ஷன்கார்டுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ இலவசஅரிசி, இலவச துணிக்கு மாற்றாக வங்கி கணக்கில் பணம் செலுத்தவும் கவர்னர் அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயமும், கந்தசாமியும் கவர்னரை அடிக்கடி சந்தித்தனர். துறைமுகத்தில் கப்பல் சரக்கு போக்குவரத்து வெள்ளோட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதனால் கவர்னர் கிரண்பேடியும் துறைமுகம் வந்து வெள்ளோட்டத்தை பார்வையிட்டார். இதன்பிறகு கவர்னர், அமைச்சரவை இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு சுமூகநிலை ஏற்பட்டதாக கருதப்பட்டது.

    ஆனால் சமீப காலமாக கவர்னர் கிரண்பேடி நாள்தோறும் அரசு அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து கலந்தாய்வு செய்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சென்டாக் அதிகாரிகள், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை என அரசின் பல்வேறு துறை அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.

    கடந்த வாரம் பெண் அதிகாரிகளை மட்டும் அழைத்த ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இதில் தங்களின் குறைபாடுகளை நேரடியாக சந்தித்து தெரிவிக்கலாம் என்றும் கவர்னர் அறிவுறுத்தினார். வழக்கமாக சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறையில் பல ஆலோசனைகளை நடத்துவது வழக்கம். இதனால் சட்டசபை வளாகத்தில் அதிகாரிகள் வருவது, போவது என பரபரப்பாக இருக்கும். ஆனால் தற்போது கவர்னர் மாளிகையே பரபரப்பாக உள்ளது. நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கும் நேரம் ஒதுக்கி அதிகாரிகள் வரவழைக்கப்படுவதால் கவர்னர் மாளிகை பரபரப்பாக இயங்கி வருகிறது.

    ஏற்கனவே அமைச்சரவைக்கும், அதிகாரிகளுக்கும் சாதகமாக இருந்த தலைமை செயலாளர் மனோஜ்பரிதா மாற்றப்பட்டு அஸ்வினி குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அரசு நிர்வாகத்தில் கவர்னர் கிரண்பேடி அதிரடியாக இறங்கியிருப்பது அரசு அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமூகநிலை திரும்பியது என நினைத்துக்கொண்டிருந்த அமைச்சரவை மத்தியிலும் கவர்னரின் இந்த அதிரடி மீண்டும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×