search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.
    X
    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

    மீத்தேன், ஹைட்ரோ திட்டங்களை காவல் துறையின் உதவியுடன் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது- வேல்முருகன்

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயு திட்டங்களை மத்திய அரசு காவல் துறையின் உதவியுடன் செயல்படுத்திவருகிறது என வேல்முருகன் கூறினார்.
    நல்லம்பள்ளி:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தர்மபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், அதை மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த வித ஒரு அதிகாரபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    மத்திய மந்திரிகள் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி நீர் ஆணையம், காவிரி நீர்குழு என மாற்றி பேசி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வகுத்தது போல, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைத்தால் மட்டுமே நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசில் உள்ள முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் செய்ய மாட்டார்கள்.

    ஏனென்றால், இவர்கள் ஊழல் செய்தவர்கள், இவர்களின் குடுமி மத்திய அரசின் கையில் உள்ளது. இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க. அரசு கிடையாது. இது பாரதிய ஜனதா அரசு.

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயு திட்டங்களை மத்திய அரசு காவல் துறையின் ஆதரவை பெற்று காவல் துறையின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

    இந்த திட்டங்களால் விவசாய விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன. கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாய நிலங்களை பாழாக்குகின்ற, மிக மோசமான நாசகார திட்டம் கெயில் திட்டமாகும்.


    கெயில் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விவசாயிகளை அழைத்து குறைகளை கேட்டறிந்து என்னுடைய ஆட்சிகாலத்தில் கெயில் திட்டம் விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக நடைமுறைபடுத்தமாட்டோம் என்று அவர் இந்த திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்றதை எல்லாம், இன்றைய ஆட்சியாளர்கள் காலில்போட்டு மிதித்து வருகின்றனர். தொடர்ந்து மத்திய அரசு, தமிழகத்தையும், தமிழக மக்களையும் கூறு போட்டு விற்பனை செய்து வருகின்றது.

    இதற்கு ஆட்சியாளர்கள் எதிர் வினையாற்றாமல் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்கள். தொடர்ந்து ரதயாத்திரை வருவதற்காக நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களை காவல் துறை கைது செய்தது. ஆனால் 144 தடை உத்தரவு இருந்தும், ரத யாத்திரைக்கு இது பொருந்தாது என தெரிவித்து மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.யும் சட்டத்தை மீறியுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×