search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரியோடு பகுதியில் தொடரும் தீ விபத்து- தீயணைப்பு துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
    X

    எரியோடு பகுதியில் தொடரும் தீ விபத்து- தீயணைப்பு துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

    எரியோடு பகுதியில் தீயணைப்புத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம் பட்டி பிரிவு பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி சோளபயிர்கள் பயிரிட்டிருந்தனர்.

    இந்த பயிர்கள் உள்பட அருகில் இருந்த மரம், செடி ஆகியவற்றில் திடீரென தீபற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தீ பற்றி எரிவதை கண்டதும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப் புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் வேடசந்தூர் தீயணைப்பு வாகனம் வேறு பணிக்கு சென்று விட்டது. இதனால் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வர தாமதமானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் குண்டாம்பட்டி பிரிவு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற எரியோடு போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு தீயணைப்பு வாகனம் வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி நிலங்களில் திடீரென தீப்பற்றி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகையன்கோட்டை ஒத்தக்கடை பகுதியில் தீ பற்றியது. இதேபோல் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளிலும் விவசாய நிலங்களில் திடீரென தீப்பற்றுகிறது. மர்ம நபர்கள் யாரும் இதற்கு தீ வைத்து செல்கின்றனரா? என தெரிய வில்லை.

    எனவே அதிகாரிகள் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.

    Next Story
    ×