search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் மறியல் செய்த காட்சி.
    X
    தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் தமிழக-கேரள எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் மறியல் செய்த காட்சி.

    ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்

    ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள விவசாயிகள் விடிய, விடிய மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு மாநில போக்குவரத்து முடங்கியது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஆண்டு தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.

    தற்போது பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. ஆனாலும் இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

    இதனை கேரளாவை சேர்ந்த ஜனதா தளம் கட்சியினர் ஏற்கவில்லை. கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ. வாக கிருஷ்ணன் குட்டி இருந்து வருகிறார். இவர் தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சித்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி தலைவர்களை அழைத்து பேசினார். அப்போதுதமிழகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரளாவுக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு 9 மணி முதலே ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் தமிழக -கேரள எல்லையில் திரண்டனர்.

    பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும் ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது.


    கோபாலபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இதனால் பதட்டம் நிலவியது. இரு மாநில போலீசாரும் எல்லையில் குவிக்கப்பட்டனர். தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட கியூவில் நின்று வருகிறது. பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி வருவதை கண்டித்து பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் தமிழ்நாடு திராவிடர் கழகம் மற்றும் ம.தி.மு.க.வினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமையில் இந்த மறியல் நடைபெற்றது.

    அவர்கள் கேரள பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். இந்த மறியல் காரணமாக தமிழக வாகனங்கள் கேரளாவுக்கு செல்லவில்லை. கேரள வாகனங்களும் தமிழகத்திற்கு வர முடியவில்லை.

    தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம் கோபாலபுரம் வழியாக தமிழகத்திற்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை. கேரள அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அம்மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இரு மாநில எல்லையில் உள்ள வாகனங்களுக்கு அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் ஜனதா தளம் மற்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கைவிடும் வரை தமிழகத்திலும் போராட்டம் நீடிக்கும் என தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

    இதே போல் உடுமலையில் இருந்தும் கேளராவுக்கு தமிழக வாகனங்கள் செல்லவில்லை. கேரள வாகனங்களும் தமிழகம் வரவில்லை. இரு மாநிலத்திலும் போராட்டம் நீடித்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. #tamilnews
    Next Story
    ×