search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து கட்சி தலைவர்கள் டெல்லி சென்று வற்புறுத்த வேண்டும்- ராமதாஸ் பேட்டி
    X

    அனைத்து கட்சி தலைவர்கள் டெல்லி சென்று வற்புறுத்த வேண்டும்- ராமதாஸ் பேட்டி

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து கட்சி தலைவர்கள் டெல்லி சென்று வற்புறுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #ramadoss #CauveryManagementBoard

    சென்னை:

    பா.ம.க. சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. சார்பில் 16-வது ஆண்டாக மாதிரி பட்ஜெட் வெளியிட்டுள்ளோம். இதை பின் பற்றினால் அரசு சிறப்பாக ஆட்சி நடத்தலாம்.

    காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. 1924-ல் 575 டி.எம்.சி. அளவுக்கு வழங்கப்பட்ட காவிரி நீர் தற்போது 177.25 டி.எம்.சி. ஆக குறைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதி.

    பெங்களூரின் நிலத்தடி நீர் மட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னை உள்பட 7 மாநகராட்சிகள், 19 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரைத் தான் நம்பி இருக்கின்றன. இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. டெல்டா மாவட்டங்களிலேயே நிலத்தடி நீர் மட்டம் 80 அடியாக குறைந்து விட்டது.

    6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டிருப்பது தான் ஒரே ஆறுதல். ஆனால் கர்நாடக அரசு இதற்கு ஒத்துழைக்குமா? தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது சந்தேகமே.

    எனவே உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எல்லா கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    காவிரி வழக்கை தமிழக அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமானது. இந்த தீர்ப்பை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கி உள்ளது. இன்னும் கூடுதல் நீதிபதிகளை கொண்ட பெஞ்ச், அரசியல் சாசன அமர்வு என்று மேல்முறையீடு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன.

    அதை தமிழக அரசு முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். #tamilnews

    Next Story
    ×