search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒதப்பையில் வெற்றிவீரபாண்டியன் தங்கி இருந்த வீடு
    X
    ஒதப்பையில் வெற்றிவீரபாண்டியன் தங்கி இருந்த வீடு

    திருவள்ளூரில் கைதான மாவோயிஸ்டுகளை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு

    திருவள்ளூரில் கைதான மாவோயிஸ்டுகளை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒதப்பையில் நேற்று முன் தினம் ஆட்டோவில் வந்த மாவோயிஸ்டுகள் தசரதன் (32), அவரது மனைவி செண்பகவல்லி என்கிற கனிமொழி (28) மற்றும் தசரதனின் சகோதரர் வெற்றிவீரபாண்டியன் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பிடிபட்ட 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் நவீன துப்பாக்கிகளை இயக்க பயிற்சி பெற்றவர்கள் என்பதும், 2008-ம் ஆண்டு கொடைக்கானலில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் வழக்கில் செண்பகவல்லி தலைமறைவாக இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 3 பேரிட மும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சில தகவல்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இரண்டு நாட்கள் விசாரணை முடிந்து தசரதன் உள்பட 3 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    கைதான வெற்றிவீர பாண்டியன் தடை செய்யப்பட்ட தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் ஏற்கனவே பலமுறை பூண்டி வனப்பகுதிக்குள் தனது இயக்கத்தின் கூட்டங்களை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் திருவள்ளூர் மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து சிறையில் உள்ள 3 பேரையும் தனியாக காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    பூண்டி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் கண்காணிப்பில் தீவிரப் படுத்தி உள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் 3 பேரும் தமிழகத்தில் எங்கெல்லாம் தங்கி இருந்தனர்? அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை தனிப்படை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×