search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி-தஞ்சை போலீஸ் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார்
    X

    சீர்காழி-தஞ்சை போலீஸ் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார்

    இந்து கோவில் குறித்து திருமாவளவன் சொன்ன கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக சீர்காழி-தஞ்சை போலீஸ் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இந்து கோவில் குறித்து சொன்ன கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலித் இஸ்லாமிய எழுச்சி நாள் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், காஞ்சி காமாட்சிம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களை இடித்து தள்ளிவிட்டு புத்த விகாரைகள் கட்ட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.



    புத்தருக்கு கோவில் இருந்ததையெல்லாம் இடித்து விட்டுத்தான் சிவன், விஷ்னு, கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, எனவே இந்து கோவில்களை தரைமட்டமாக்கிவிட்டு புத்தருக்கு கோவில் கட்ட வேண்டும் என உண்மைக்கு புறம்பான தவறான வரலாற்றினை பதிவு செய்யும் நோக்கில் பேசியுள்ளார். பொது அமைதியை கெடுத்து, மத கலவரத்தை தூண்டிவிட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடும் வகையில் பேசியுள்ள திருமாவளவன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்தில் இந்து மகாசபை மண்டல அமைப்பாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரும் புகார் மனு கொடுத்துள்ளார்.
    Next Story
    ×