search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை; சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
    X

    கடலூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை; சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

    கடலூர் மவாட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது. அதே வேளையில் இரவில் குளிர் வாட்டி எடுத்தது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான காற்றத் தழுத்த தாழ்வு நிலை வடதிசையில் நகர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூரில் நேற்று மதியம் வெயில் கொளுத்தியது. மாலை 6.30 மணியளவில் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. சற்றுநேரத்தில் சூறாவளிக்காற்று வீசியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடலூர் லாரன்ஸ்ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் கடந்த சென்றனர்.

    மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. சுப்புராயலு செட்டித்தெரு போன்ற பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் நகரில் திடீர் மழை பெய்ததால் அலுவலக ஊழியர்கள், பயணிகள், சாலையோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    நெல்லிக்குப்பத்தை அடுத்த சோழவல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதற்காக நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த துரைக்கண்ணு என்பவரின் கூரைவீட்டின் சுவர் திடீரென்று இடிந்து சுப்பிரமணி மீது விழுந்தது.

    இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    திட்டக்குடி பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. இதில் ராமநத்தம் அருகே வாகையூர் அருகே திட்டக்குடி-ராமநத்தம் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பொது மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×