search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டி
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டி

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிகழ்வாக மதுரையில் இன்று கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டி நடந்தது.
    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலைத்திறன் போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று மதுரையில் 25 ஆயிரம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.

    பேரணி யானைக்கல் பகுதியில் இருந்து புறப்பட்டு கீழவாசல், தெற்குவாசல் வழியாக மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பை வந்தடைந்தது.

    பேரணியை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் ஓட்டப்போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் முன்பிருந்து தொடங்கியது.

    போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்ற மராத்தான் ஓட்டம் தல்லாகுளம், கோரிப் பாளையம், பெரியார் பஸ் நிலையம் வழியாக ரெயில்வே மைதானம் வந்தடைந்தது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிகழ்வாக மதுரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 3 மணிக்கு மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
    Next Story
    ×