search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமியின் நிதி அதிகாரம் ரத்து: கிரண்பெடி நடவடிக்கை
    X

    நாராயணசாமியின் நிதி அதிகாரம் ரத்து: கிரண்பெடி நடவடிக்கை

    புதுச்சேரி அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான நாராயணசாமியின் அதிகாரத்தை ரத்து செய்து கிரண்பெடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி பார்வையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மாநில கவர்னர் பொறுப்பு வகிப்பவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார். வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து விமர்சித்து வருகிறார். இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.

    புதுச்சேரியில் ரூ.50 கோடி வரை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் என்றால் மத்திய உள்துறையின் அனுமதியை பெற வேண்டும். முதல்-அமைச்சருக்கு ரூ.10 கோடி வரையிலும், துறைகளின் செயலாளர்களுக்கு ரூ.2 கோடி வரையிலும் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து விட்டு, நிதி அதிகாரம் இல்லாமல் இருந்த தலைமைச் செயலாளருக்கு ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை கவர்னர் வழங்கி உள்ளார். அரசு துறைகளின் செயலாளர்களுக்கான ரூ.2 கோடி வரையிலான நிதி ஒதுக்கீடு அதிகாரத்தையும் கவர்னர் ரத்து செய்தார்.



    இது சரியான அணுகுமுறை இல்லை என்பதால் கவர்னரின் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா அனுப்பி வைத்தார். கவர்னரின் உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் தராததால் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர்கிறது.

    கிரண்பெடி பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்தால் எந்த ஒரு திட்டத்திற்கும் முதல்-அமைச்சரால் நிதி ஒதுக்க முடியாது. துறை செயலாளர் மூலம் ரூ.2 கோடி வரை செலவு செய்யும் உரிமையை அமைச்சர்களும் இழந்து விடுவர். இதனால் புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. 
    Next Story
    ×