search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்
    X

    கல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்

    இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது.
    இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வெளியே தெரியும் போது பூதாகரமாகி இறுதியில் விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

    கணவன், மனைவி ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுக் கஷ்டப்பட்டு வாழ்வதை விட ஆரம்பத்திலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தைச் செலுத்தி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

    1. திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படும் சூழ்நிலைக்குச் சென்று விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானம் என்னவோ அதை முதலில் உணர்ந்து அந்த வரம்பிற்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

    2. அவசரகாலம் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். இதில் ஏழை, பணக்காரன் என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆகையால் வேலை இழப்பு, அவசர மருத்துவ சிகிச்சை என எந்த ஒரு அவசரத் தேவையாக இருந்தாலும் 'எமர்ஜென்சி ஃபண்ட்' அதாவது அவசரத் தேவைக்கான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்.

    3. உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணத்திற்காக ஆரம்பத்திலிருந்தே சிறுக சிறுக சேமிக்கத் திட்டமிடுங்கள். இதைப்போல வீடு வாங்கும் திட்டம் என எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஆலோசித்து சேமிக்கத் துவங்குங்குகள்.



    4. திருமணத்திற்கு முன் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி இருக்கலாம்; அதைச் சரியாக திருப்பிச் செலுத்தியும் இருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகாவது எதற்கெடுத்தாலும் கடன் என்ற நிலையைத் தவிருங்கள்; கடன் வாங்காமல் வாழ்க்கையை இன்பகரமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

    5. திருமணத்திற்கு முன் நீங்கள் ப்ளேபாயாக கூட இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் நீங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்கூல் பாயாக இருந்தால் சற்று கடினமே. ஆகையால் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குங்கள். தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம்; எதற்காகச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்குத் தேவையானதை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நிதி சார்ந்த புத்தகங்களை இன்றிலிருந்தாவது படிக்கத் துவங்குங்கள்.

    6. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையின் இறுதி தருவாயிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த அவசியம் செய்ய வேண்டியது ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடுதலே. ஆகையால் திருமணம் முடிந்த ஆண்டே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாதாந்திர சம்பளம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணத்தை சிறிது சிறிதாக ஒய்வுக்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுங்கள். இல்லையெனில் இது சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

    7. இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது. ஏனெனில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பார்கள். அதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரில் ஒருவாரது இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

    மண வாழ்க்கை முறிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், கணவன், மனைவி இடையே உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது மிக முக்கியம். 
    Next Story
    ×