search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்புகள்
    X

    மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை ஏற்படுத்தும் பாதிப்புகள்

    மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

    தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.



    பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

    மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

    தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. 
    Next Story
    ×