search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வமாக மாறிய திரவுபதி
    X

    குலதெய்வமாக மாறிய திரவுபதி

    பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

    இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

    உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    Next Story
    ×