search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனியில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்
    X

    பழனியில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க நடந்தது.
    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்டவை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவராய நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம் செய்து 6 கலசங்கள் வைத்து கலசபூஜை, மாங்கல்யபூஜை, ஸ்கந்த யாகம், சுப்ரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கான சடங்குகள் நடைபெற்றன.



    பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.10 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’ ‘ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனைக்கு பின் ஓதுவார்கள் தேவாரம் பாடினர். பின்னர் கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண விழா நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சுந்தரமூர்த்திசிவம், சந்திரமவுலி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் உமா, சவுமிய நாராயண கவராய நாயக்கமார் கட்டளை உறவின்முறை தக்கார் பாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வெங்கிடுசாமி, நிர்வாகிகள் பரமானந்தம், பரசுராமன் மற்றும் 11 ஊர் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×