search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனியில் இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்
    X

    பழனியில் இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் இன்று (புதன்கிழமை) மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி மாப்பிள்ளை கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வெள்ளி யானையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருக்கல்யாணத்தையொட்டி, இன்று காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் சுவாமி புறப்பாடும், மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் சவுமியநாராயண கவர நாயக்கர் மண்டபம் வந்தடைதலுக்கு பின் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடைபெற்று, மாலை 6.30 மணிக்கு கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளுகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தந்தப்பல்லக் கில் திருஉலா காட்சியும், அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருஉலா காட்சியும் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 7.30 மணிக்கு வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் திருஉலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிக்கு பின் இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் திருஉலா காட்சியும், 24-ந் தேதி காலை 7.20 மணிக்கு அபிஷேக, ஆராதனைக்குப் பின் புதுச்சேரி சப்பரத்தில் கிரிவீதி உலாவும், காலை 10.25 மணிக்கு சாந்து மண்டகப்படியும், இரவு 7 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் திருஉலாவும், இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×