search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள்
    X

    புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கேது பகவான்

    புராணத்தின் படி ‘சந்திர கிரகணம்’ என்பது கேது பகவானால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். அது சந்திரனை சில நேரங்களில் விழுங்கவும் செய்யும். இதனாலேயே சந்திரனுக்கும் கேதுவுக்கும், சமுத்ரா மந்தனின் போது பிரிவு ஏற்பட்டது. பாற்கடலில் இருந்த அமிர்தத்தை, தேவர்கள் பருகும்போது அசுரர்களின் ஒருவன் ரகசியமாக பருக வந்தான். அப்பொழுது மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், சூரிய பகவானும் சந்திர பகவானும் இந்த விஷயத்தைக் கூறினர். விஷ்ணு தன் கையில் இருந்த சுதர்சன சக்கரத்தின் மூலம் அசுரனின் தலையை துண்டித்தார். அதில் ஒரு பகுதி ராகு எனவும், மறுபகுதி கேது எனவும் அழைக்கப்பட்டது.

    காவிரி நதி

    தென் இந்தியாவில் புனித நீராக கருதப்படுவது காவிரி நதி. குறுமுனி என்று அழைக்கப்பட்டாலும், தன்னுடைய தவ வலிமையால் மாமுனிவராக விளங்கியவர் அகத்தியர். சிவனிடம் இருந்து தமிழ் மொழியைக் கற்று, அதன் மூலம் தமிழில் இலக்கணம் படைத்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட அகத்தியர் ஒரு முறை சிவபெருமானிடம் இருந்து புனித நீரை, தன்னுடைய கமண்டலத்தில் பெற்றுக்கொண்டு தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தென் பகுதி நீரின்றி, வறட்சியால் தவித்தது. இதனால் விநாயகர் காக்கையின் வடிவம் கொண்டு, அகத்தியரின் கையில் இருந்த கமண்டலத்தை தட்டிவிட்டார். இதனால் அதில் இருந்த நீர் பெருக்கெடுத்து நதியாக பாயத் தொடங்கியது. அதுவே காவிரி நதி என்று அழைக்கப்படுகிறது.

    கந்தவ காடு

    யமுனை நதிக்கரையில் இருந்த கந்தவ காட்டை ஒரு முறை அக்னி தேவன், தன் தீ ஜூவாலையால் எரித்துக் கொண்டிருந்தார். அந்த தீயில் நாகர்களில் முக்கியமானவரான தச்சன் உள்ளிட்ட நாகங்கள் பல சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட இந்திரன், தன்னுடைய நண்பர்களான தச்சன் மற்றும் பிற நாகங்களை காப்பாற்றும் பொருட்டு, மின்னலை உண்டாக்கி மழையை பெய்ய வைத்தான். இதையடுத்து அக்னி தேவன், கிருஷ்ணனிடமும், அர்ச்சுனனிடமும் முறையிட்டார். கிருஷ்ணர், அர்ச்சுனனிடம் இதற்கு தீர்வு காணும்படி சொல்ல, அர்ச்சுனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லில் இருந்து அம்புகளை சிதறச் செய்து, அதனை குடையாகப் பிடித்தான். இதனால் இந்திரன் தருவித்த மழை தடுக்கப்பட்டது. அதன்பின்னர் அக்னி கொழுந்து விட்டு எரிந்து, கந்தவ வனத்தை அழித்தது.

    கிருதயுகம்

    உலகத்தின் கால அளவுகள் 4 யுகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகும். இதில் கிருத யுகம் முதன்மையானதான உள்ளது. இந்த யுகத்தில் வாழும் மனிதர்கள் அனைவருமே அறநெறியுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த கிருத யுகமானது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகும். அதே போல் திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்கள் கொண்டதாகவும், அதில் வாழ்பவர்கள் நான்கில் மூன்று பகுதியினர் அறத்துடனும், ஒரு பகுதியினர் அறமின்றியும் வாழ்வார்கள். அடுத்ததாக உள்ள துவாபர யுகத்தில் சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபாதி மக்கள் அறம் இன்றியும் வாழ்வர். இந்த யுகத்தின் கால அளவு 8 லட்சத்து 64 ஆயிரம் வருடங்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்களைக் கொண்டது. இதில் நான்கில் மூன்று பகுதி மக்கள் அறமின்றியும், ஒரு பகுதி மக்கள் அறத்துடனும் வாழ்வார்கள். இந்த நான்கு யுகங்களும் அடங்கியது மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகிறது.
    Next Story
    ×