search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளிக்கு கங்கா குளியல் எப்போது?
    X

    தீபாவளிக்கு கங்கா குளியல் எப்போது?

    தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.
    சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், 'தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

    அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், 'தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

    எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

    அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள். அத்தகைய விருப்பம் உள்ளவர்கள் அதற்குரிய எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.



    கங்கா குளியல்

    தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாட வேண்டிய பண்டிகையே தீபாவளித்திருநாள். அன்று அதிகாலையில் (சுமார் 5.30 மணிக்கு முன்பாக) அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புதிய ஆடைகள் உடுத்திக் கொண்டு பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் பூஜை முதலியவற்றைச் செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    நரகாசூரனின் தாயார் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று நரகாசூரனை அழித்த ஸ்ரீ மகாவிஷ்ணு தீபாவளி அன்று இவ்விதம் செய்பவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கூறினார். மேலும் தீபாவளி அன்று அதிகாலையில் சந்திரன் இருக்கும் போதே முறையாக நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் ஏற்படாது.

    இன்று மட்டும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், தண்ணீரில் கங்காதேவியும் வாசம் செய்வதால் அனைவரும் அன்று வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். குளிக்கும்போது அபாமார்கம் என்னும் நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி தூர எறிந்து விட வேண்டும்.

    எண்ணெயை காய்ச்சி தேய்த்து குளியுங்கள்

    தீபாவளியன்று தேய்த்துக் குளிக்க வேண்டிய எண்ணெயை, முதல் நாளே சிறிது அரிசியும் கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். (ஓமத்திற்குப் பதில் மிளகு சேர்ப்பவர்களும் உண்டு). புராண காரணம் எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் அதுவும் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் ஜுரம் போன்ற எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணெயை காய்ச்சியும், நீரை சூடுபடுத்தியும் குளிக்க வேண்டும் எனச் சொல்லி வைத்துள்ளனர்.

    அதே சமயம் அரிசி மகாலட்சுமியின் அம்சம். எனவே அதனை எண்ணெயில் இட்டு காய்ச்சும் வழக்கம் வந்தது என்று சொல்வார்கள். ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இரண்டுமே முக்கியம் என்பதால் அதுவே கங்காஸ்நானத்தின் தத்துவமாக மாறிவிட்டது.
    Next Story
    ×