search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டதையும், பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.
    X
    நாகராஜா கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டதையும், பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    நாக வழிபாட்டுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு நாகராஜர் குடியிருக்கும் மூலஸ்தானம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். கோவிலில் பிரசாதமாக மண் வழங்கப்படுகிறது. இந்த பிரசாத மண் 6 மாதம் கருப்பாகவும், 6 மாதம் வெள்ளையாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் இருப்பதால் நாகராஜரை தரிசனம் செய்ய குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அன்று நாகராஜரை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த நிலையில் ஆவணி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவிலில் குவிந்த பக்தர்கள் முதலில் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு வரிசையாக நின்று பால் ஊற்றி அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர். அதோடு அங்கு அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாகராஜரை தரிசனம் செய்ய ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை நேற்று கோவிலின் நுழைவு வாயிலையும் தாண்டி வெளியே உள்ள ரத வீதி வரை நீண்டு இருந்தது. வெகு நேரம் காத்திருந்து நாகராஜரை வழிபட்ட பின் சிவன், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய தெய்வங்களையும் பக்தர்கள் வழிபட்டார்கள்.

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×