search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை கோவிலில் நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரிசி பூஜை எளிமையாக நடந்த போது எடுத்த படம்.
    X
    சபரிமலை கோவிலில் நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரிசி பூஜை எளிமையாக நடந்த போது எடுத்த படம்.

    சபரிமலையில் எளிமையாக நடந்த நிறைபுத்தரிசி பூஜை

    பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி கோவிலில் நிறை புத்தரிசி பூஜை எளிமையாக நடந்தது.
    கேரள கோவில்களில் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசியின்றி வாழவும் வேண்டி விளைந்த நெற்கதிர்களை வைத்து பூஜை நடத்தி அந்த நெற்கதிர்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதே நிறை புத்தரிசி பூஜையாகும்.

    இந்த பூஜையை நடத்தினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில் நேற்று கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கரிக்ககம் சாமுண்டி கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிரு‌ஷ்ணன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

    சபரிமலையில் பலத்த மழை மற்றும் பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பம்பை திருவேணியில் பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று காலையில் சபரிமலையில் மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் தலைமையில் பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை மிக எளிமையாக நடந்தது. இந்த பூஜைகளில் சன்னிதான பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஒரு சில அதிகாரிகள் மற்றும் கீழ் சாந்திகள் மட்டுமே கலந்து கொண்டனர். சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மழை அதிகரித்து வருவதால், சபரிமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பத்தனம் திட்டையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பு கருதி பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×