search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தீர்த்தவாரி
    X

    மலைக்கோட்டை கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தீர்த்தவாரி

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் கடந்த 24-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவளுடைய தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியும், 25-ந்தேதி காலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் இரவில் தேரில் இருந்து கீழே இறக்கப்பட்டு, கோவில் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தனர். நேற்று காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவில் கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) தாயுமான அடிகள் உற்சவமும், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனையும், இரவு 7 மணிக்கு மேல் திருமுறை பாராயணத்துடன் சுவாமி, அம்பாள் யாதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ந்தேதி(புதன்கிழமை) இரவு பிச்சாடனார் வீதி உலா நடைபெற உள்ளது. 3-ந்தேதி(வியாழக்கிழமை) இரவு சண்டிகேஸ்வரர் திரு வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×