search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் மேல்தளத்தில் இருந்த பக்தர்களையும், மூலஸ்தான கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததையும் காணலாம்.
    X
    நெல்லையப்பர் கோவில் மேல்தளத்தில் இருந்த பக்தர்களையும், மூலஸ்தான கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததையும் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    14 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் உதவியுடன் ரூ.4 கோடியே 92 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. விழா நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள், தீபாராதனை நடந்தன.

    தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 4.30 மணிக்கு யாகசாலை பூஜையில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. காலை 5 மணிக்கு நாடி சந்தானமும் சிறப்பு பூஜையும் நடந்தது. அதன்பிறகு தர்ப்பை புல் கொடி மற்றும் வெள்ளி நூல் கட்டப்பட்டு யாகசாலையில் இருந்து சுவாமியை மூலஸ்தானத்துக்கு அழைத்து செல்கின்ற வைபவம் நடந்தது. அதன்பிறகு மூலஸ்தானத்தில் தீபாராதனை நடந்தது. 7.15 மணிக்கு யாகசாலையில் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

    காலை 8 மணிக்கு மேளதாளம் முழங்க யாகசாலையில் கும்பங்களில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் ராஜகோபுரங்களுக்கும், விமானங்களுக்கும், நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன. புனிதநீர் எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள் பட்டு வண்ண குடைபிடித்தபடி சென்றனர்.


    நெல்லையப்பர்- காந்திமதி அம்மனுக்கு நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.

    காலை 9.45 மணிக்கு சுவாமி விமானத்தில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடந்து 9.47 மணிக்கு சுவாமி விமானம், அம்மாள் விமானம், நெல்லை கோவிந்தர் விமானம், தாமிரசபை விமானம் மற்றும் 5 ராஜகோபுரங்களிலும், இதர சுற்றுகோவில் விமானங்களில் உள்ள கோபுர கலசங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    அப்போது வானத்தில் 9 கருடன்கள் வட்டமிட்டன. இதைக்கண்டு பரவசம் அடைந்த பக்தர்கள், ‘தென்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி‘ என்றும், ‘ஓம் நமசிவாய நமக‘ என்றும் பக்தி கோஷங்களை எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணை பிளந்தன. மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்களும் விண்ணை அதிர செய்தன. தொடர்ந்து பக்தர்கள் மீது, ‘ஸ்பிரே‘ கருவி மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 4 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடாக நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலாவும் நடந்தது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் காலை 10 மணி முதல் அன்னதானம் நடந்தது.

    Next Story
    ×