search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்ப திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்ப திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்ப திருவிழா

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்ப திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் வாகன பவனி, அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம், சப்தாவர்ண நிகழ்ச்சி நடைபெற்றன.

    10-ம் நாள் விழாவான நேற்று இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு தீப ஒளியிலும், மின்னொளியிலும் குளம் ஜொலித்தது.

    தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், இரண்டாவது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், மூன்றாவது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர். மூன்றாவது சுற்றின் முடிவில் சாமிக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வாகனங்களில் சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். திரளான பக்தர்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தெப்ப திருவிழாவில் குமரி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி., திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கனகராஜன், ஆறுமுகம், குமார், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒப்பந்ததாரர்கள் மோகன்தாஸ், கண்ணன், கோவில் குத்தகைதாரர்கள் பகவதியப்பன், மூர்த்தி, வடிவேல் முருகன், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், பக்த சங்க நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகமும், தெய்வீக இயல், இசை, நாடக சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர். 
    Next Story
    ×