search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் மேல்தளத்தில் பக்தர்கள் அமருவதற்கு வசதியாக சிவப்பு நிற விரிப்புகள் போடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கோவில் மேல்தளத்தில் பக்தர்கள் அமருவதற்கு வசதியாக சிவப்பு நிற விரிப்புகள் போடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

    நெல்லையப்பர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நடைபெறுகின்ற யாகசாலை பூஜையில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கோபுரங்களில் வர்ணங்கள் பூசப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக விழாவை காண வருகின்ற பக்தர்கள் அமருவதற்கு வசதியாக கோவில் மேல்தளத்தில் சிவப்பு நிற விரிப்புகள் போடப்பட்டு உள்ளன. பலிபீடங்கள், பரிவார மூர்த்திகள், சுற்றுக்கோவில்கள் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    ராஜகோபுரம், விமானத்திற்கு செல்வதற்கு சாரம் (அதாவது படிக்கட்டுகள்) அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவில், ராஜகோபுரம் முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. கோவிலின் வாசல்களில் வாழை மற்றும் தோரணம் கட்டப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேக பூஜை கடந்த 20-ந்தேதி மாலை 5.30 மணிக்கு விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலையில் விசேஷ சாந்தி, 2-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இரவு 7 மணிக்கு விசேஷ சாந்தி, 3-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன.

    யாக சாலை பூஜையில் கலந்து கொள்வதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் பூஜையை பார்வையிட்டு சாமியை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இரவில் பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இந்த யாகசாலை பூஜைக்கு வருகின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வ தொண்டர்களும், பக்தர்கள் பேரவையினரும் ஈடுபட்டு வருகிறார்கள். யாகசாலையில் சிவன், பார்வதி, கணபதி, முருகன் மற்றும் முனிவர்கள் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் யாகசாலை கும்பங்கள் அழகுபடுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.


    நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜையில் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு விசேஷ சாந்தி, 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு விசேஷ சாந்தி, 5-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.

    நாளை அதிகாலை 3 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பரிவார மூர்த்திகளின் யாகசாலை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. காலை 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேள தாளம் முழங்க புனிதநீர் கடம் கோபுரத்திற்கும், விமானத்திற்கும், மூலவர் சன்னதிக்கும் எடுத்துச்செல்லப்படும். காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதிஉலா ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தன்று மதியம் 12 மணிக்கு நெல்லை பொருட்காட்சி திடலில் அன்னதானம் நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் பட்டாலியன் போலீசார் என 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஊர்க்காவல் படையினரும், தன்னார்வ தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×