search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை நடக்கிறது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை நடக்கிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, பங்குனி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை(புதன் கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் நடக்கிறது.

    பின்னர் அங்கு எழுந்தருளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் 25-ந்தேதி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.40 மணிக்கு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 27-ந்தேதி காலை 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது.

    திருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்களுக்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது ஆடி வீதிகளில் நடந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. 28-ந் தேதி தேரோட்டமும், 29-ந் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×