search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வேறு எந்த தலத்திலும் காணப்பெறாத வகையில், இத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம், ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை இருப்பது சிறப்பு.

    பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல் (கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல்(ரிஷப வாகன காட்சி 5-ம் திருநாள்), அழித்தல்(திருத்தேர் 10-ம் திருநாள்), மறைத்தல்(ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் 11-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம் 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள் புரிந்து வருவதாக புராண மரபு.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று காலை பல்லக்கிலும், இரவில் மரக்குதிரை வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று(திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கிலும், இரவில் வெள்ளி குதிரை வானகத்திலும் புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடக்கிறது. 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×