search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா
    X

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி சக்தி கரக ஊர்வலம் நடந்தது. விழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் மயானக்கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    விழாவையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷமான அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக வந்து, சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் அம்மன் மயானம் நோக்கி புறப்பட்டு சென்றார். அப்போது அம்மனின் முன்பு பிரம்ம கபாலத்தை கையில் ஏந்திய படி கோவில் பூசாரிகள் பக்தி பரவசத்துடன் ஆடியபடி மயானத்திற்கு சென்றனர். இதையடுத்து அங்கு 11 மணிக்கு அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது.

    விழாவின்போது அங்காளம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக் கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பலர், அவற்றை பிரசாதமாக எடுத்து சென்றனர்.

    முன்னதாக அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர். இதில் சிலர் நாக்கு, தாடையில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மயானத்துக்கு வந்திருந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலர் அருள் வந்து ஆடினர். அவர்களில் சிலர் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடித்தது, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    அருள் வந்து ஆடியவர்களின் முன்பு பலர் விழுந்து வணங்கினர். அப்போது அவர்கள் மீது, சாமி ஆடியவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவில் ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×