search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கிய திருவிழாவான மாசி திருவிழா வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    2-ம் திருநாளான 21-ந்தேதி காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்தை சேர்கின்றனர். பின்னர் அம்பாள் எட்டு வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மண்டபத்தை சேர்கிறார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, பரிவாரமூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து, மேல கோவிலை சேர்கின்றனர்.

    3-ம் திருநாளான 22-ந்தேதி காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி பூங்கோயில் சப்பரத்திலும், அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. பின்னர் வடக்குமாட வீதி சேனை தலைவர் மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

    4-ம் திருநாளான 23-ந்தேதி காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

    5-ம் திருநாளான 24-ந்தேதி காலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. இரவில் குடவருவாயில் தீபாராதனையாகி, சுவாமி- அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

    6-ம் திருநாளான 25-ந்தேதி காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, பந்தல் மண்டபம் சேர்கிறார். இரவில் மேல கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

    7-ம் திருநாளான 26-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. பின்னர் மேல கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. காலையில் சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, மேல கோவில் சேர்கிறார்.

    8-ம் திருநாளான 27-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்திய கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்கிறார். காலை 11.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பச்சை சாத்திய கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, கீழ கோவில் சேர்கிறார். பின்னர் மேல கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர் மேல கோவில் சேர்கின்றனர்.

    9-ம் திருநாளான 28-ந்தேதி காலையில் சுவாமி- அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. இரவில் சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. பின்னர் தேர் கடாட்சம் நடக்கிறது.

    10-ம் திருநாளான அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவில் சுவாமி- அம்பாள் பெரிய பல்லக்குகளில் திருவீதி உலா நடக்கிறது.

    11-ம் திருநாளான 2-ந்தேதி மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெரு யாதவர் மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குள மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப திருவிழா நடக்கிறது.

    12-ம் திருநாளான 3-ந்தேதி மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி- அம்பாள் எட்டு வீதிகளிலும் வலம் வந்து, வடக்கு ரத வீதி 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபத்தை சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×