search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொது ஆவுடையார் கோவில் - பட்டுக்கோட்டை
    X

    பொது ஆவுடையார் கோவில் - பட்டுக்கோட்டை

    பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து, அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.

    மரமே மூர்த்தி


    சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம், திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.

    இறைவடிவங்கள்


    முகப்பில் அழகான பித்தளை தகட்டினால் செய்யப்பட்ட தோரண வாயிலில் இறை வடிவங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மரத்தின் முழுவடிவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில் திருவாட்சி ஒளி செய்ய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமானின் திருமுகம் “லிங்கம்” போன்ற வடிவத்தைக் காட்டி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிலைப்படியும், திருக்கதவும் பித்தளை தகடுகளால் அழகுபடுத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. அதன் எதிரே நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்.

    சோமவாரவழிபாடு

    கார்மேகம் திரண்டு வந்து கனமழைப் பொழியும் கார்த்திகை மாதம் தான் இந்த ஆலயத்தின் திருவிழாக் காலமாகும். கார்த்திகை மாதத் திங்கட்கிழமை (சோமவாரம்) ஒவ்வொன்றும் சிறப்பு வழிபாட்டிற்கு உரிய நாட்கள் ஆகும். பகல் நேரத்தில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும், பெருந்திரளாக வரும் பக்தர்கள் கருவறை கதவிலேயே மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து அபிஷேகம், அர்ச்சனை முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்கின்றனர்.

    சோமவார திருவிழாக்காலங்களில் முடிகாணிக்கை, மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். ஒவ்வொரு சோமவாரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுவர். கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.

    வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பகலில் நடை திறக்கும் கோவில்


    பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடை திறக்காமல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரை என நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும். 
    Next Story
    ×